மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் உள்ள பூதலி தல்கோட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் சிவசரண், கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பு தனது தாயை இழந்திருந்த சிறுவன், தனது மாமா மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வந்தார். அவர் 10ம் வகுப்பில் 92% மதிப்பெண் பெற்றிருந்ததுடன், நீட் தேர்விற்கும் தயாராகி வந்தார். தாயை இழந்த பின் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த அவரை உறவினர்கள்  சமாதானம் செய்து வந்தனர்.

தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில், “நான் உயிருடன் இல்லாததால் தான் இறந்து கொண்டிருக்கிறேன். என் அம்மா கனவில் வந்து, ஏன் வருத்தமாக இருக்கிறாய் எனக் கேட்டார். என்னை தன்னிடம் வரச் சொன்னார்.அதனால் என் வாழ்க்கையை முடிக்க முடிவு செய்தேன்” என உருக்கமாக எழுதியுள்ளார். மேலும், “என் அம்மா உயிரிழந்த போது நானும் சென்றிருக்க வேண்டியதுதான். ஆனால் என் மாமா மற்றும் பாட்டிக்காக உயிருடன் இருந்தேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவன் கடிதத்தில், தன்னுடன் வாழ்ந்த பாட்டியை தனது தந்தையின் வீட்டுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் தனது மாமாவிடம் வலியுறுத்தியுள்ளார். அவரது இந்த தற்கொலை செய்தி உள்ளூர் மக்களையும், பள்ளி ஆசிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.