பிக் பாஸ் பிரபலம் நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் மிஸ்டர் அண்ட் மிஸஸ். அந்தப் படத்தை அவரது மகள் ஜோதிகா தயாரித்துள்ளார். இப்படத்தில் ராத்திரி சிவராத்திரி… என்ற இளையராஜா இசையமைத்த பாடல் இடம் பெற்றுள்ளது.

அதனால் காப்புரிமை பெறாமல் தனது பாட்டை பயன்படுத்தி உள்ளதாக இளையராஜா தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது இளையராஜாவின் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், இளையராஜாவின் பாட்டை பயன்படுத்தியது மட்டுமல்லாமல் அவரது பெயரையும் படத்தில் பயன்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதனை அடுத்து  வனிதா விஜயகுமார் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், “ஏற்கனவே எக்கோ நிறுவனத்திடம் இருந்து இளையராஜாவின் பாடல்களை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. அவர்களிடமிருந்து பாடலை பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளோம்” என தெரிவித்தார். மேலும் படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் பெயரையும் நீக்கி விட்டதாக கூறியுள்ளார்.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் சோனி மியூசிக்கையும் சேர்க்க உத்தரவிட்டுள்ளார். பின்னர் வரும்  ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.