ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்களூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். அவரது மகள் பவித்ரா என்பவருக்கு பள்ளி சான்று, ஆதாரச் சான்று மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவற்றில் பெயர் சரியாக உள்ளது. ஆனால் பிறப்புச் சான்றிதழில் பெயரில் பிழை திருத்தம் இருந்துள்ளது. அதனை திருத்துவதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவரது தாய் ரேவதி முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் கடவூர் தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று தாசில்தார் சவுந்தரவல்லியை நேரடியாக சந்தித்து தனது மகள் பிறப்புச் சான்றிதழ் பெயர் எழுத்துப் பிழையை திருத்தி தர கோரி விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தினை பெற்றுக் கொண்ட தாசில்தார் சவுந்தரவல்லி அதனை சரி செய்வதற்கு ரூபாய் 5000 லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் ரேவதி லஞ்ச பணத்தை கொடுக்காமல் நேரடியாக கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரேவதியிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் 5000 பணத்தை தாசில்தார் சவுந்தரவல்லி இடம் கொடுக்க கூறியுள்ளனர்.

அதேபோன்று ரேவதியும் நேற்று தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று சவுந்தரவல்லியிடம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அந்தப் பணத்தை வாங்கிய சவுந்தரவல்லி மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.