கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் கடந்த ஜூன் மாதம் நடந்த ரூ.3.24 கோடி பணம் வழிப்பறி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் உட்பட ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது திருவாரூர் நகர பாஜக இளைஞரணி தலைவர் ஸ்ரீராம் (வயது 30) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீராம் வழிப்பறி குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும், அவர் காரை பயன்படுத்தி இந்த சம்பவத்தில் உதவியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வழிப்பறி சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்ரீராமின் காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து மோசடி மூலம் பணம் எடுத்தது தொடர்பாக கேரள காவல்துறையும், தமிழ்நாடு காவல்துறையும் இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாஜகவில் முக்கிய பொறுப்பு வகித்தவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கில் இன்னும் சிலர் தொடர்புடையிருக்கலாம் என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
