தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி, மாவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (67). கடந்த 2023-ம் ஆண்டு, அவரது மனைவி சின்னம்மாளுடன் (55) குடும்பத்தகராறு ஏற்பட்டது. கோபத்துடன் வீட்டில் இருந்த கடப்பாறையால் சண்முகம் தனது மனைவியை தாக்கியதில், சின்னம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் சண்முகத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணை நிறைவில், குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (22.07.2025) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி முருகன், குற்றவாளியான சண்முகத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் நிலவுகிறது.