காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மேவளூர்குப்பம் ஊராட்சி, கிறிஸ்துவ கண்டிகை கிராமத்தில் கொடூரமான கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இளம்பெண் சௌந்தர்யா (25) என்பவரை, அவரது காதலனாக இருந்த தினேஷ் (27) கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷும், சௌந்தர்யாவும் மேவளூர்குப்பத்தில் தனித் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் சௌந்தர்யா வேறொரு ஆண் நண்பருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுவதால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஜூலை 19ம் தேதி இரவு, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ், சௌந்தர்யாவை தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று, கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதனையடுத்து அவரது தோழிகள் தேடி பார்த்த போது, ரத்தக்கறையில் சௌந்தர்யா சடலமாக கிடந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் வழங்கினர்.
தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சௌந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றம் செய்த தினேஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காதல், நிச்சயதார்த்தம் என ஒரு பக்கம் வளர்ந்த உறவு, சந்தேகம் மற்றும் கோபத்தின் பேரில் கொலையில் முடிவடைந்தது பகுதியை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
