ஆந்திர மாநிலம் கொனசீமா மாவட்டம் சவரம் கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒலிடி புஷ்பா, திருமணமானவர். இவருக்கு 4 வயதான மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்ற புஷ்பா, தாயார் மற்றும் சகோதரனுடன் பிறகு வசித்து வந்தார்.
இந்நிலையில் வேலை தேடி கடந்த ஆண்டு விஜயவாடா சென்ற புஷ்பாவுக்கு அங்கு ஷேக் ஷமி (22) என்ற இளைஞருடன் நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ரசோலி பகுதியில் வாடகை வீட்டில் லிவ் இன் முறையில் வாழத் தொடங்கினர்.
புஷ்பாவின் லிவ் இன் உறவை அவரது குடும்பத்தினர் ஏற்று கொண்டு, அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ஆனால், மதுவுக்கு அடிமையான ஷேக் ஷமி, கடந்த சில மாதங்களாக புஷ்பாவை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திக் கொண்டிருந்தார். இதற்கு புஷ்பா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு, மதுபோதையில் வந்த ஷேக் ஷமி மீண்டும் அதே கோரிக்கையை வைத்துள்ளார்.
இதற்கு புஷ்பா மறுப்பு தெரிவித்ததும், ஆத்திரம் அடைந்த ஷேக் ஷமி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து புஷ்பாவை கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். தடுக்க முயன்ற புஷ்பாவின் தாயாரும், சகோதரனும் கத்திக்குத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்தனர். அருகிலுள்ளவர்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சம்பவ இடத்தில் உயிரிழந்த புஷ்பாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, ஷேக் ஷமியை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
