வரதட்சனை மற்றும் குடும்ப வன்முறையின் காரணமாக திருமணமான இளம் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறித்து சமூக ஆர்வலர்கள், பெண் இயக்குநர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது குரலை எழுப்பி வருகின்றனர்.
இதையடுத்து, நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், பெண்கள் தங்களுக்கான உரிமைகளை உணர வேண்டும் என்றும், பெற்றோர்கள் சிறு வயதில் இருந்தே அதற்கான மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யூடூப்பில் சேனலில் வெளியாகியுள்ள வீடியோவில், “மாமியார் கூறியதை மாற்றமின்றி பின்பற்ற வேண்டும் என்று புதிதாக திருமணமான பெண்களுக்கு கூறுவது இன்றைய சமூகத்தில் ஆபத்தான நிலையை உருவாக்கி விடுகிறது.
பெண்களுக்கு எதிராக ஏதேனும் நடக்கும்போது, எதிர்வினை தெரிய வைக்கும் தைரியம் குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர்கள் வழங்க வேண்டும். பெண்கள் பொருளாதார ரீதியாக சுயமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவையானதை கேட்க மற்றவர்களை நாடும் நிலை ஏற்படக்கூடாது,” என்றார்.
மேலும், “ஒரு பிரச்சனை ஏற்பட்ட பின் அதைக் குறித்து பேசத் தொடங்குவோம். ஆனால், பிரச்சனைகள் வருவதற்கு முன்பே அதைக் கவனித்து தீர்வு காணும் அறிவு, உணர்வு பெண்களிடம் இருக்க வேண்டும். பெண்கள் மட்டும் அல்ல, ஆண் பிள்ளைகளிடமும் இதையே சொல்லிக் கொடுக்க வேண்டும்.
திருமண வாழ்க்கை என்றால் சகிப்புதான் என்று கூறுவது, அவர்களைப் பாதிக்கக்கூடிய பெரிய மனநிலையை உருவாக்குகிறது. அது சமுதாய பிரச்சனைகளுக்கு அடிப்படை ஆகிறது,” என்றும் கூறினார்.
இதற்கு எடுத்துக்காட்டு கூறும் வகையில், “சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது அவள் சத்தம் போடவில்லை என்பதைக் கேட்டு, மருத்துவர்கள் அவரைப் புகழ்ந்ததாக அவளது தாயார் சொன்னது.
ஆனால், பிரசவத்தின் போது வலித்தால் சத்தம் போடக்கூடாது என்று நாம் கூறுகிறோமா? இதுவே பெண்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாது என்று சுட்டிக்காட்டும் ஒரு உகர்ந்த உதாரணம். பெண்கள் தியாகத்துக்கே வாழவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதை நாம் இப்போதே நிறுத்த வேண்டிய நேரம் இது,” என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்.-
