பிரபல நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் தற்போதைய சூழலில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கு முடியும் வரை பொதுவெளியில் ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தது. ஆனால், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயம் ரவி, தனது தோழியான பாடகி கெனிஷா மீதான சைபர் தாக்குதல்கள் குறித்தும், ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரால் தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்தும் கண்ணீர் மல்கப் பேசினார். மேலும், தனது குடும்பம் சீரழிய ‘மூன்று எழுத்து’ நடிகை ஒருவரே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியது.
நீதிமன்ற உத்தரவை மீறி ஜெயம் ரவி ஊடகங்களுக்குப் பேட்டியளித்ததாகக் கூறி, அவரது மனைவி ஆர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை மீறியதற்காகப் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக ஜெயம் ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது ஜெயம் ரவி தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். “எனது திருமணத் தகராறு தொடர்பான கருத்துகளைப் பொதுவெளியில் பகிர்ந்ததற்காகவும், அதனால் மனவேதனை அடைந்த அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணமும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
