டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 ஆண்டுகளாக இந்தத் திட்டம் செயல்படுவதைக் கொண்டாடும் வகையில், டெல்லி துவாரகாவில் நடைபெற்ற விழாவில், மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு பேசினார்.

அதில், நாட்டில் 10 லட்சம் குடிமக்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி வழங்கப்படும் என அவர் அறிவித்தார். இதன் மூலம் கிராம மக்களுக்கு தொழில்நுட்ப ஆற்றலை அதிகரிக்கும் முயற்சியாக இது அமையும்.

மேலும், கிராம அளவிலான தொழில்முனைவோர்களான (VLEs) பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர்களின் சேவைகள் மூலம் IRCTC டிக்கெட் சேவைகள், ஆதார் சேர்க்கை மற்றும் புதுப்பிப்பு, பான் கார்டு, பாஸ்போர்ட் சேவைகள், வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகள், தொலை மருத்துவம், கல்வி சேவைகள், பயிற்சி மற்றும் சட்ட உதவிகள் போன்றவை வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இத்தகைய சேவைகள் அனைத்தும் பொதுசேவை மையங்கள் (CSC) மூலமாக வழங்கப்படும்.

2014-ஆம் ஆண்டு 83,000 CSC மையங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 5.5 லட்சம் மையங்களாக வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 74,000-க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர் இந்த சேவையில் பங்கேற்று வருகின்றனர்.

“இது செயற்கை நுண்ணறிவின் யுகமாக உள்ளது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவேண்டிய காலம் இது,” என அமைச்சர் கூறினார். அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் இந்த திட்டங்களை ஒருங்கிணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.