அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து வரும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள்  மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு நேரடியாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால் இதனை ஏற்கனவே திருமாவளவன் நிராகரித்து விட்டார். அதாவது எடப்பாடி பழனிசாமி என்ன செய்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தான் தொடரும் என்று அறிவித்தார். இதே போன்று தற்போது சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் கூட்டணி அழைப்பை நிராகரித்துள்ளார். இது பற்றி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

பாஜக உடன் கூட்டணி அமைத்திருக்கும் இபிஎஸ் விரித்திருப்பது ரத்தின கம்பளம் அல்ல ரத்தம் படிந்த கம்பள வரவேற்பு. அதன் ஆபத்தை உணர்ந்தும் தனக்கு இருக்கும் நெருக்கடியால் அதில் பயணிக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கல்விக் கொள்கை போன்றவைகள் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும். மேலும் தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என எடப்பாடி பழனிசாமி அழைத்துள்ளது 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என்று கூறினார். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி ரத்தின கம்பளம் விரித்து கூட்டணிக்கு வரவேற்பதாக கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.