பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மாநில முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல், வீட்டு நுகர்வோருக்கு மாதத்துக்கு 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இது மாநிலத்தில் உள்ள 1.67 கோடி வீட்டு குடும்பங்களுக்கு பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகத் தளமான ‘X’ல் இந்த தகவலை பகிர்ந்த நிதிஷ், தாங்கள் ஆரம்பத்திலிருந்தே மலிவான மின்சாரம் வழங்கி வருவதாகவும், இப்போது இலவசமாக வழங்குவது இன்னொரு முன்னேற்றம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் 10,000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்யும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடுகளில், கூரைகள் மற்றும் பொது இடங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். அதற்காக மக்கள் ஒப்புதல் பெறப்பட்ட பின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

குறிப்பாக, ‘குதிர் ஜோதி யோஜனா’ திட்டத்தின் கீழ் மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு இந்த சூரிய மின் உற்பத்தி அமைப்புகளின் முழுச் செலவையும் அரசு ஏற்கும் எனவும், மீதமுள்ள மக்களுக்கு அரசின் நிதி ஆதரவு வழங்கப்படும் எனவும் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

“>

 

இது மட்டுமல்லாமல், சமீபத்தில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இலவச மின்சாரம் அறிவிக்கப்பட்டிருப்பது, வாக்காளர்களை ஈர்க்கும் முக்கியமான திட்டமாகவும், எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு ஸ்ட்ராடஜிக் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு பரபரப்பான முடிவாகவும் பார்க்கப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வாக்குகளை உறுதிப்படுத்த வாக்குறுதிகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை அறிவிக்கின்றன. அந்த வகையில், 20 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் நிதிஷ் குமார் தற்போது தனது ஆட்சியை நீட்டிக்க பல்வேறு மக்களோடு தொடர்புடைய திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

தேர்தலுக்கு முன் இவை அனைத்தும் முக்கிய அரசியல் நடவடிக்கைகளாகவும், பொதுமக்களின் வாழ்க்கையை நேரடியாகத் தொட்டுத் தாக்கும் நடவடிக்கைகளாகவும் கருதப்படுகின்றன.