அறுபடை வீடுகளில் 3-ம் வீடான பழனி உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் புகழ்பெற்ற ஒன்று. இங்கு தினமும் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்ட மந்திரியான காசி விஸ்வநாதன் சண்முகம் நேற்று முன்தினம் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பழனிக்கு வந்துள்ளார்.
அவரது ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்காகவே பழனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு இருந்தது. இவருக்கு போலீஸ் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையும், கோவில் நிர்வாகத்தினர் சார்பில் வரவேற்பும் அளிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து ஹெலிகாப்டரில் இருந்து தரயிறங்கிய அவர் ஒரு காரில் பழனி அடிவாரம் சென்றடைந்தார். பின்பு அங்கிருந்து ரோப்கார் வழியாக கோவிலுக்குள் சென்று கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தரிசனத்தை முடித்துவிட்டு அடிவாரம் வந்த மந்திரி அங்கிருந்து ஹெலிபேட் அமைக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு மீண்டும் காரில் சென்றுள்ளார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடிக்கு சென்றுள்ளார். இதற்காகவே பழனியில் நேற்று அதிக போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
