திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த ஒரு தகாத சம்பவம் தற்போது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. காரியாங்குடி, நெம்மேலி, இலங்கைச்சேரி பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்த பள்ளியில், அரசு அளிக்கும் காலை உணவு திட்டத்தின் கீழ் சமையல் பணிகள் தினசரி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை, சமையலறைக்கு வந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். சமையலறை நுழைவாயில் உடைத்து, உள்ளே இருந்த மளிகைப் பொருட்கள் சிதறடிக்கப்பட்டிருந்தது மட்டுமல்லாமல், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் குடிநீர் அருந்தும் பிளாஸ்டிக் தொட்டியில் மனித கழிவு கொட்டப்பட்டிருந்தது. மேலும் வாழைமரங்கள் சேதப்படுத்தப்பட்டு, தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டிருந்தன. அதிலும் மிக அதிர்ச்சியாக, சிலர் பள்ளி வளாகத்திலேயே சிக்கன் சமைத்து சாப்பிட்டது போல கள் இருந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பாளர் அன்புச்செல்வியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது. திருவாரூர் துணை காவல் சூப்பிரண்டு மணிகண்டன், தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தனர். குடிநீரில் மலம் கலந்துள்ள விவகாரம் தெரியவந்ததும், கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டு கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து, திருவாரூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றத்தில் ஈடுபட்ட 3 குடிபோதை நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாதி அடிப்படையிலான விரோதம் அல்ல, குடிபோதையில் உள்ளவர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டதாகவும், பள்ளியில் அனைத்து சமூகத்தினரையும் சேர்ந்த மாணவர்கள் இருப்பதால் சாதிய பாகுபாடு இல்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து, “இந்த செயல் மன்னிக்க முடியாதது. இதில் தொடர்புடையவர்கள் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது” என எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.