கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு உள்ள சிவசக்தி நகரில் வசிக்கும் குழந்தைகள், வேர்கடலை என எண்ணி கொட்டாங்கி செடியின் விதைகளை சாப்பிட்டதனால் விஷத்தன்மை ஏற்பட்டு மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய பாதிப்புகளால் அவதிப்பட்டனர்.

நேற்று பகல் திருவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்ட சில சிறுவர்கள், விளையாடிக்கொண்டிருந்தபோது அருகே இருந்த கொட்டாங்கி மரத்தில் இருந்து விழுந்த விதைகளை வேர்கடலை என எண்ணி சாப்பிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து 5 குழந்தைகளும் திடீரென கீழே விழுந்து மயக்க நிலைக்குள் சென்றதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், “குழந்தைகள் கொட்டாங்கி விதைகளை வேர்க்கடலை என்று நினைத்து தவறுதலாக சாப்பிட்டதால்  விஷத்தன்மை ஏற்பட்டு உடனடி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சிகிச்சைக்கு பலன்  அளித்துள்ளதால் குழந்தைகள் தற்போது பாதுகாப்பான நிலையில் உள்ளனர்,” எனத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் சுற்றியுள்ள மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை பெற வேண்டும் என்ற அவசியம் மீண்டும் தெளிவாகியுள்ளது.