தமிழக அரசுப் பணிகளில், கடந்த மே மாத நிலவரப்படி மொத்தமாக 9,42,941 ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், ஒரே மாதத்தில் 58 வயதை கடந்த 8,100 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு துறையிலும் மாதந்தோறும் ஓய்வுபெறும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காலிப் பணியிடங்களும் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த காலியிடங்களை நிரப்ப தமிழக அரசு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தேர்வுகளை நடத்தி வருகிறது.
அதற்கான ஒரு பகுதியாக, இன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் ஆகிய பணிகளுக்கான 3,935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வில், 5,26,553 ஆண்கள், 8,63,068 பெண்கள் மற்றும் 117 திருநங்கைகள் என மொத்தம் 13,89,738 பேர் எழுதினர். தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் உள்ள 314 மையங்களில் இந்த தேர்வு ஒரே நேரத்தில் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
3,935 பணியிடங்களுக்கு இத்தனை பேர் போட்டியிடுவது அரசுப் பணியின் மீது உள்ள நம்பிக்கையையும், நிலைத்த உரிமையின் மீதான பொதுமக்களின் நெருக்கடியையும் காட்டுகிறது. ஒரு காலிப் பணியிடத்திற்கு சராசரியாக 353 பேர் போட்டியிடுகின்றனர் என்பது தமிழகத்தில் அரசு வேலைக்கு உள்ள கோரிக்கையை உணர்த்துகிறது.
“கால் காசு சம்பளமாயிருந்தாலும் அரசு வேலை என்றால் நிச்சயம் இருக்கிறது” என்பதற்கேற்பவே இத்தனை பேர் மல்லுகட்டுகின்றனர் என்றே சொல்லலாம்.
