மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் அரசு (18). இவர் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நண்பன் பெயர் அழகு பாண்டி. இந்நிலையில் அரசு தனது வீட்டில் ஒரு நாள் இருந்தபோது அவரது நண்பர் அழகு பாண்டி வேறொரு என் மூலமாக வீட்டிற்கு போன் செய்து காவல்துறையினர் பேசுவது போல வாக்கி டாக்கி சத்தத்துடன் மிமிக்ரி செய்துள்ளார்.
அப்போது பேசிய அவர்”உங்க பையன ஒழுங்கா நடந்துக்க சொல்லுங்க. அவனிடம் கவனமா இருங்க. தொடர்ந்து ஏதாவது சேட்டை செய்தால் சட்ட முறைப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது” என எச்சரிப்பது போன்று பேசியுள்ளார். அதனை உண்மை என நம்பிய அரசு குடும்பத்தினர் மிகவும் பயத்தில் உள்ளனர்.
பின்னர் சில நாட்கள் கழித்து தனது வீட்டிற்கு போன் செய்து ஏமாற்றியது நண்பன் அழகு பாண்டி தான் என அரசுக்கு தெரிய வந்தது. அதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதனை இரு குடும்பத்தினரும் பேசி சமாதானம் செய்துள்ளனர். இதனை அடுத்து நண்பர்கள் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.
தற்போது சமீபத்தில் அழகு பாண்டியின் அண்ணன் செல்ல பாண்டியை அரசு முறைத்துக் கொண்டே சென்றுள்ளார். அதனை பார்த்த அழகு பாண்டி அண்ணன் தனது தம்பியை அரசு எதாவது செய்து விடுவாரோ? என அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, நேற்று நள்ளிரவு அரசின் வீட்டிற்கு கத்தியுடன் செல்லப்பாண்டி சென்றுள்ளார்.
வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவர், அரசின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். அவரை தடுக்க முயன்ற அரசின் தாயார் மற்றும் சகோதரியையும் தாக்கியுள்ளார். பின்னர் வீட்டு வாசலில் இருந்து குதித்து தப்பியோடியுள்ளார் அவரை பிடிப்பதற்காக ஓடிய அரசு ரத்தப்போக்கு அதிகமானதால் சம்பவ இடத்திலேயே மயங்கி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிலைமான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரசின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளி செல்ல பாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர். நண்பன் விளையாட்டாக செய்த காரியம் மிகப்பெரிய கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
