உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில், ஒரு அப்பாவி நாய்க்குட்டியை அதன் தாயின் கண் முன்னே குச்சியால் அடித்து கொடூரமாக துன்புறுத்திய மனிதாபிமானமற்ற சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அருகில் இருந்த ஒருவரால் வீடியோபிடிக்கப்பட்டு, பின்னர் சமூக ஊடகங்களில் “@MahendrMahii” என்ற பயனர் பகிர்ந்ததைத் தொடர்ந்து சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர், அந்த நாய்க்குட்டியின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு, ஒரு குச்சியால் அடித்து, பின்னர் தரையில் வீசும் காட்சிகள் தெளிவாக உள்ளன. இந்த செயல் நடைபெறும் போதே தாய் நாய் அருகில் நின்று காயமடைந்த குட்டியை நோக்கி ஓடும் காட்சி பலரது மனதை உருக்கியது. இதனை தொடர்ந்து, விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பந்தப்பட்ட வாலிபரை உடனடியாக கைது செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவிய இந்த காணொளிக்கு அம்ரோஹா போலீசார் விரைவில் பதிலளித்தனர். “இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, திதாலி காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது, மற்றும் சட்டத்திற்கமைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மீதான கண்டனம் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில், விலங்குகளுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையும், சமூக ஊடகங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் தான் எதிர்காலத்தில் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு தடையாக இருக்கும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.