
பீகார் மாநிலத்தின் சௌபால் மாவட்டத்தில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. அதாவது 24 வயதுடைய மிதிலேஷ் குமார் முகியா என்ற இளைஞர், தனது மாமா சிவசந்திர முகியாவின் மனைவி ரீட்டாவுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்பட்டு, அவரை கட்டாயமாக அத்தையை திருமணம் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் கேமராவில் பதிவாகி சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
மிதிலேஷ், பீம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீவ்சாபூரில் உள்ள அவரது மாமா வீட்டில் இல்லாத போது அத்தை ரீட்டாவுடன் வாலிபர் உல்லாசமாக இருந்த நிலையில் அதனை உறவினர்கள் சிலர் பார்த்து விட்டனர். அவர்கள் அனைவரும் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த நிலையில் பின்னர், மிதிலேஷை ரீட்டாவுடன் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி நெற்றியில் குங்குமம் வைக்க வைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்கது, ரீட்டா மற்றும் சிவசந்திரா தம்பதிக்கு நான்கு வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
இந்த சம்பவத்தில் மிதிலேஷின் தந்தை ராமச்சந்திரா போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தாங்கள் தலையிட முயன்றபோது தாமும் மனைவியும் தாக்கப்பட்டதாகவும், ராஜா குமார், விகாஸ் முகியா, சிவசந்திரா, சூரஜ் முகியா, பிரதீப் தாக்கூர், சுரேஷ் முகியா, ராகுல் குமார் மற்றும் சஜன் சாஹ்னி உள்ளிட்டவர்கள் தாக்கியதாகவும் கூறியுள்ளார். காயமடைந்த மிதிலேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.