பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற ராமதாஸ் தலைமையிலான கூட்டத்தின் போது அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமதாஸ் உயிரோடு இருக்கும் வரை நான் தான் கட்சியின் தலைவர் என்று கூறிய நிலையில் அரசியலில் வாரிசு கிடையாது என்பதால் யாருக்கு வேண்டுமானாலும் என் கட்சியை ஒப்படைப்பேன் என்றும் கூறினார். அதோடு அன்புமணியை செயல் தலைவராக மட்டுமே நியமித்துள்ளார்.

ஆனால் அன்புமணி நான் தான் கட்சியின் தலைவர் என்று கூறுகிறார். அதன் பிறகு ராமதாஸ் ஒருபுறம் கட்சியில் புதியவர்களை நியமிக்க அன்புமணி மற்றொருபுறம் கட்சியிலிருந்து அவர்களை நீக்குவது மற்றும் தனியாக அவர் பொறுப்புகளை சிலருக்கு வழங்குவது என செய்கிறார். இதனால் பாமக கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் தொண்டர்கள் பலரும் மீண்டும் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தின் முன்பாக பாமக கட்சியின் தொண்டர்கள் 5 பேர் திடீரென ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என கூறி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி  விசாரணை நடத்தி வருகிறார்கள்.