
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் இண்டுஸ்இண்ட் வங்கிக் கிளையில் நடந்துள்ள பரபரப்பான FD மோசடி வழக்கில், முன்னாள் வங்கி மேலாளர் மஞ்சுளா தியாகராஜன் தலைமறைவாகி உள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் ஆகியோர் பெயரில் ரூ.4.36 கோடியை வைப்பு நிதியாக கடந்த 2022-இல் வங்கியில் செலுத்தியிருந்தனர்.
ஆனால், இம்முக்கிய FD-கள் எந்த அதிகாரபூர்வ கோரிக்கையுமின்றி முன்கூட்டியே முடிக்கப்பட்டு, பல வங்கி கணக்குகளுக்கு மோசடியாக பணம் மாற்றப்பட்டுள்ளதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
அதன் மூலம், Alamu Memorial Trust மற்றும் பல FD கணக்குகள் சட்டவிரோதமாக முடிக்கப்பட்டு, போலி கடிதங்கள், காசோலைகள் மூலம் ரூ.2.64 கோடி மற்றும் ரூ.1.40 கோடி என மொத்தம் 4 கோடிக்கும் மேற்பட்ட பணம் வங்கி மேலாளர் மற்றும் அவருடைய கூட்டாளிகளால் அபகரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
விசாரணையில் மஞ்சுளா தியாகராஜன் தனது நண்பர்கள் நாகேஸ்வரன் மற்றும் ஆறுமுக குமாருடன் சேர்ந்து, FD பணங்களை மோசடியாக அவர்களது வங்கி கணக்குகளுக்கு மாற்றியமைத்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் மட்டும் நாகேஸ்வரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் கணக்குகளில் ரூ.72 லட்சம் மற்றும் ஆறுமுக குமாரின் கணக்கில் ரூ.1.64 கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சுளா தியாகராஜன் தற்போது தலைமறைவாக உள்ளார். கடைசி தகவலின்படி அவர் பிரான்ஸில் இருக்கிறாரென தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், அவருக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். FD-மூலமாக நம்பிக்கையை காப்பாற்றி வைத்த வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்து, திட்டமிட்டு வெளிநாட்டுக்கு தப்பியுள்ளார்.
இது உண்மையிலேயே ‘லக்கி பாஸ்கர்’ கதையை ஒத்த நிகழ்வாகவும், வங்கிக் கணக்கதாரர்களிடம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.