
விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராம பகுதியில் மாரிமுத்து – தங்கம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு திருமண முடிந்த நிலையில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மாரிமுத்து தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இவர் வலது காலில் வீக்கம் ஏற்பட்டு தீராத வலியில் அவதிப்பட்டு வந்தார்.
அதனால் கடந்த 30ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள் எம்.ஆர்.எஸ் ஸ்கேன் எடுக்கும்படி கூறினார். அதில் அவரது வலது காலில் 2 இடங்களில் ஜவ்வு கிழிந்துள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார். அதன்படி நேற்று காலை மாரிமுத்துவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின் கண் விழித்த மாரிமுத்து தனது வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் செய்யப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மருத்துவர்களிடம் கேட்டபோது அவர்கள் பதிலளிக்க முடியாமல் நின்றனர். தனது காலை பார்த்து வேதனை அடைந்த மாரிமுத்து கதறி அழுத நிலையில் அவரது சத்தத்தை கேட்டு உறவினர்கள் உள்ளே சென்றனர். அங்கு மாரிமுத்துவின் இடது காலில் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதை பார்த்து மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு மருத்துவர்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டு 10 நாட்களில் குணமாகிவிடும். வலது காலில் வரும் திங்கட்கிழமை அறுவை சிகிச்சை செய்கின்றோம் என்று கூறினார். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.