நாகப்பட்டினம் மாவட்டம் கப்பட்டினம் அருகே, சாக்கு மூட்டையில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணையில், சடலமாக இருந்தவர் வேளாங்கண்ணியைச் சேர்ந்த 75 வயதான மும்தாஜ் என்பதும், அவரது இரு மகன்கள் தாயை அடக்கம் செய்ய முடியாமல் காட்டில் வீசியிருந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த 27ஆம் தேதி, வடக்கு பொய்கைநல்லூர் அருகே உள்ள காந்தி மகான் கடற்கரை சாலையில் உள்ள தைல மரக் காட்டில் சாக்கு மூட்டையைக் கண்டெடுத்த பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த மூட்டையில் இருந்து மூதாட்டியின் சடலத்தை மீட்டனர். சிசிடிவி மூலம் சக்கர வாகனத்தில் அந்த மூட்டையை கொண்டு வந்தவர் செய்யது மற்றும் சுல்தான் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இருவரும் மறைந்த மும்தாஜின் மகன்கள் என உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில், மும்தாஜ் மூன்று வாரங்களுக்கு முன்னர் வயது முதிர்வால் உயிரிழந்துள்ளதாகவும், தந்தையின் இறப்புக்குப் பிறகு மிகவும் வறுமையில் வாடிய அந்தக் குடும்பம், தாயின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் வீட்டு உள்ளே 12 நாட்கள் வைத்திருந்தனர் என்றும் தெரிகிறது. உடலில் துர்நாற்றம் வீசியதை மூடியவாறு சாம்பிராணி புகையை விட்டுவந்தனர். துர்நாற்றம் அதிகமாகியதால், இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையாக கட்டி தைலமரக் காட்டில் வீசியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இருவரும் காவல்துறையால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் எதுவும் இல்லை என்றும், மரணம் இயற்கையானதுதான் எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம், வறுமை காரணமாக ஒருவரின் இறப்புக்குப் பின் கூட மரியாதையாக உடலை அடக்கம் செய்ய முடியாத அளவுக்கு சிலர் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது.  மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.