
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறியதாவது, “காவல்துறை என்பது எப்பொழுதுமே அதிகாரத்தின் பக்கம் தான் நிற்கும்.
செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் பக்கம் தான் நிற்பார்கள் இதுதான் வரலாறு எங்காவது ஒன்று, இரண்டு சூழலில் மட்டும் மக்கள் பக்கம் மனசாட்சிக்கு பயந்து நிற்பார்கள்.
அதாவது தனது மேல் அதிகாரி கூறியவற்றிற்கு கட்டுப்பட வேண்டும் என கட்டுப்படுவர். இதில் யாரையும் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. தனி சிறப்பு படை உள்ளே வந்து பாதிக்கப்பட்டவரை அடிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதன் படி அவர்கள் செய்துள்ளனர்.
வேண்டுமென்றே யாரையும் சும்மா அடிக்க மாட்டார்கள். இந்த அறிவுறுத்தல் எங்கிருந்து வந்தது? அது யார்?. அதற்காக அதிகாரிகளை நான் தப்பு சொல்லவில்லை. உங்கள் வீட்டுப் பிள்ளையை அடி என்றால் அடிப்பார்களா? இதைத்தான் பல நூறு வருடங்களாக அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்”இவ்வாறு அவர் கூறினார்.