மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 25 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர் தொடர்பான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெலிவரி பாய் போல நடித்து பாதுகாப்பு நிறைந்த சங்கத்தில் நுழைந்த குற்றவாளி, அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, மயக்க மருந்து தெளித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் புனேவின் கோத்ருட் பகுதியில் உள்ள கோத்வா என்ற உயர்தர வீட்டுவசதி சங்கத்தில் கடந்த புதன்கிழமை மாலை 7.30 மணியளவில் நடைபெற்றதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர், ஒரு வங்கியிலிருந்து பார்சல் வந்து விட்டது என கூறி, அந்த பெண்ணிடம் கையொப்பம் வாங்க வேண்டும் என்றும், பேனா மறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

பெண் தனது வீட்டின் கதவைத் திறந்தவுடன், குற்றவாளி அவரது முகத்தில் மயக்க மருந்து கொண்ட ஸ்ப்ரே ஒன்றை தெளித்துள்ளார். பின்னர், அவர் வீட்டிற்குள் நுழைந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். மேலும், வன்கொடுமை செய்த பின், அவருடைய மொபைல் போனை எடுத்து செல்ஃபி எடுத்துள்ளார். அதில் “நான் திரும்பி வருவேன்” எனவும், மற்றொரு மிரட்டல் செய்தியையும் அவரது மொபைலில் தட்டச்சு செய்துள்ளார்.

மேலும், வன்கொடுமையின் போது வீடியோவும் எடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் தற்போது அவரது மொபைல் போனில் உள்ள தகவல்களை, மற்றும் சங்கத்தின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது தவிர, குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.