திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் நாகலிங்கம் (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் சொந்த ஊர் மதுரை. பிழைப்பிற்காக திருப்பூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். இன்று காலை ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சாய சலவை ஆலையில் தனது 3 கூட்டாளிகளுடன் வேலைக்கு சென்றார்.

அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது நாகலிங்கம் தண்ணீர் எடுப்பதற்காக சாயக் கழிவு நீர் தொட்டி அருகே சென்றார். அப்போது அந்தத் தொட்டி மூடப்படாமல் இருந்த நிலையில், நாகலிங்கம் கால் தடுமாறி திடீரென சாயக்கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்துவிட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து பார்த்ததும் அவரை வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர்.

இந்த தகவல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நாகலிங்கத்தை கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்டனர். ஆனால் சாயக்கழிவில் மூழ்கியதால் அவர் மூச்சு திணறி உயிரிழந்து விட்டார்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நாகலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.