
உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், கடந்த காலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த “ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை” என்ற கடுமையான சட்டம் நடைமுறையில் இருந்தது. இதனால், பெரும்பாலான தம்பதிகள் ஆண் குழந்தையை விரும்பினர்.
இது, பெண்களின் பிறப்பு விகிதத்தை குறைக்கச் செய்தது. தற்போது அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், அதன் விளைவாக 3 கோடிக்கும் மேற்பட்ட சீன ஆண்கள் திருமணம் செய்ய (மணப்பெண்) இல்லாமல் தவிக்கின்றனர்.
இந்த நிலையில், வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள சீன ஆண்கள் முனைந்து வருகிறார்கள். இதை தங்கள் லாபத்துக்காக பயன்படுத்தும் மோசடி கும்பல்கள் அதிகரித்து வருகின்றன.

சில மோசடி திருமண முகவர்கள், வேலை வாய்ப்பு என்று கூறி வங்கதேச பெண்களை சீனாவுக்கு அனுப்பி, பின்னர் வலுக்கட்டாய திருமணத்தில் ஈடுபடச் செய்கிறார்கள். இது ஆள்கடத்தல் மற்றும் திருமண மோசடி என்ற குற்றமாக கருதப்படுகிறது.
இது தொடர்பாக வங்கதேசத்தில் உள்ள சீன தூதரகம், எச்சரிக்கை வெளியிட்டு, “வெளிநாட்டு மனைவிகளை வாங்கும் யோசனையை தவிர்க்க வேண்டும். மோசடி கும்பலிடம் சிக்கினால் பணத்தையும், வாழ்க்கையையும் இழக்க நேரிடும்” என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வங்கதேசத்தில் திருமண மோசடியில் சிக்கினால் நீதிமன்ற நடவடிக்கைகள் நீண்ட காலம் எடுக்கும் என்பதால், மன அழுத்தம், வழக்குத் தாமதம் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வகைச் செயல்களில் சிக்கிக் கொண்டால், வங்கதேசத்தில் குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
சீன அரசு தன்னுடைய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈடுபடும் எல்லைத்தாண்டிய திருமண முகவர் செயல்களை அனுமதிக்கவில்லை என்றும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.