மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை அரபிக்கடல் மற்றும் தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதேபோன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 27ஆம் தேதி உருவாகவுள்ளது.
அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழையும் இன்று தொடங்க இருக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று முதல் மே 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட மாவட்டத்தில் நேற்று முதலே பலத்த கனமழை பெய்து வருவதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கின்றனர். இதேபோன்று தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இங்கு அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.
மேலும் தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
