
ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7ஆம் தேதி இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை ஜப்பானைச் சேர்ந்த “திட்டவமைப்பு நிபுணர்” (Strategy Professional) சடோரு நாகோ பாராட்டியுள்ளார்.
இது பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட “பொறுப்பான மற்றும் சரியான பதிலடி” என அவர் குறிப்பிட்டுள்ளார். ANI செய்தி நிறுவனத்துடன் பேசிய அவர், பாகிஸ்தான் அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2018ஆம் ஆண்டு “இந்திய இராணுவ உத்திகள்” தொடர்பான ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்ற நாகோ, இந்தியாவின் தீர்மானம் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடைபெற்றதால் அது மிகவும் நியாயமான நடவடிக்கை எனக் கூறினார்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் – ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் முகாம்களில் இருந்த 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். “இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல், பாகிஸ்தான் அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்திற்கு சரியான தண்டனை” என்றும் நாகோ வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பது ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது என்றும், அவர்கள் இந்நிலையில் நஷ்டம் அடைகிறார்கள் என்பதை உணர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“பயங்கரவாதிகளை யாராலும் நிர்வகிக்க முடியாது. இது பாகிஸ்தானுக்கே தற்கொலை போன்ற முடிவுகளை உருவாக்கும்” என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தியாவின் குரல் உலக நாடுகளில் கேட்கப்பட வேண்டியது மிக அவசியம் என்றும், இது பிராந்திய பிரச்சனை மட்டுமல்ல, உலகத்துக்கே எதிரான பயங்கரவாதம் என்பதும் நாகோவின் வலியுறுத்தலாக இருந்தது.
இந்தியாவின் போராட்டத்தை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் சொல்லும் நோக்கில், சஞ்சய் ஜா தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழு ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு உள்ளது.
டோக்கியோவிற்கு சென்ற இந்த குழுவில், தூதர் மோகன் குமார், ஹேமங் ஜோஷி, அபிஷேக் பானர்ஜி, அபராஜிதா சாரங்கி, பிரிஜ் லால், பிரதான் பாருவா உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் பாதுகாப்பு முயற்சிகள் குறித்து சரியான தகவலை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது என சடோரு நாகோ தெரிவித்துள்ளார்.