ராஜஸ்தான் மாநிலம் போபாலில், 7 மாதங்களில் 25 முறை திருமணம் செய்து பல மணமகன்களை ஏமாற்றிய அனுராதா என்ற பெண்மணி போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலித் திருமண மோசடியில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படும் அனுராதா, ஒவ்வொரு திருமணத்திற்கும் பிறகு வீட்டிலிருந்த பணம், நகை மற்றும் மொபைல் போன்களுடன் தப்பியோடியுள்ளார். சவாய் மாதோபூர் மாவட்டம் மன்டவுன் காவல் நிலையத்தில் மே 3ஆம் தேதி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சிக்கலான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

முக்கிய குற்றவாளியான அனுராதா, உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது மாமனார் ராம்பவனின் வாக்குமூலப்படி, அனுராதா 2018ஆம் ஆண்டு விஷால் பாஸ்வான் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். சில வருடங்கள் இணைந்து வாழ்ந்தபின் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறால் விஷால், குடும்பத்திலிருந்து விலகியதாகவும், அதன் பிறகு அனுராதாவுடன் தொடர்பு முறிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

“என் மகன் இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட நமக்குத் தெரியவில்லை” என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

புகார் அளித்த விஷ்ணு சர்மா என்பவர், ரூ.2 லட்சம் கொடுத்து அனுராதாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஒப்பந்தம் ஏப்ரல் 20ஆம் தேதி சவாய் மாதோபூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

ஆனால் மே 2ஆம் தேதி இரவு, அனுராதா தன்னிடம் இருந்த நகை, பணம் மற்றும் மொபைல் போனை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தனிப்பட்ட தேடுதல் படையை அமைத்து, போபாலில் நடத்திய அதிரடி சோதனையில், ஒரு தரகர் காட்டிய புகைப்படத்தின் அடிப்படையில் அனுராதாவை கைது செய்தனர்.

இந்த மோசடியில் அனுராதா மட்டுமல்லாமல், போபாலைச் சேர்ந்த பல தரகர்கள், பெண்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர். அவர்கள் திருமணத்துக்கு வர விரும்பும் ஆண்களை வாடிக்கையாளர்களாக அடையாளம் காண்பதோடு, ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஒப்பந்தங்கள் செய்து திருமணங்களை நடத்தி வந்துள்ளனர்.

திருமணமாகிய சில நாட்களுக்குள் அனுராதா தப்பியோடி மணமகனின் வீட்டில் கொள்ளை நடத்துவதாக வழக்கம் இருந்தது. தற்போது இந்த போலித் திருமண மோசடிக் கும்பலின் நடவடிக்கைகளை நிறுத்த காவல்துறையினர் விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.