திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துக்கருப்பன் (23), வைரவன் (31), சுந்தரபாண்டி (38), அர்ஜுனன் (48) உள்பட 9 பேர் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 36.400 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

அதன் பின் அவர்களை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த நிலையில் இந்த வழக்கு மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது குற்றவாளிகளான வைரவன், சுந்தரபாண்டி, முத்துக்கருப்பன், அர்ஜுனன், நவீனா, லோகேஸ்வரா பிரசாத் ஆகியோருக்கு 12 வருடங்கள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சேக்பரித், சேக் முகமது ரஃபிக், திவ்யா ஆகிய 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமாகவும்  விதிக்கப்பட்டுள்ளது.