தென்காசி மாவட்டம் வளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ராமச்சந்திரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் சொந்த ஊருக்கு வரும் போதெல்லாம் செங்கோட்டையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரது காரில் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துள்ளார்.

இருவருக்கும் இடையே 15 ஆண்டு கால நட்பு இருந்துள்ளது. இதனை பயன்படுத்தி காளிதாஸ் ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனால் ராமச்சந்திரன் தனது வங்கி கணக்கில் காளிதாஸ் பணம் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொடுத்ததாக தெரிகிறது.

அதனை பயன்படுத்தி காளிதாஸ் 6 ஏக்கர் 18 சென்ட் நிலத்தை கிரையம் செய்து வாங்கியுள்ளார். கார், 28 லட்சத்திற்கு 6 சென்ட் நிலம் என ராமச்சந்திரனின் பணத்தை செலவு செய்துள்ளார். அந்த நிலங்களை விற்பனை செய்த பணத்தை ராமச்சந்திரனிடம் கொடுக்காமல் தவறான கணக்கு காட்டி இதுவரை காளிதாஸ் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து ராமச்சந்திரன் கேட்டபோது காளிதாஸ் பணம் தர முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் ராமச்சந்திரன் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் காளிதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.