சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பனை ஏரி உள்ளது. அங்கு ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த ஏரியில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதி மக்களின் உதவியுடன் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது ஏரியில் சடலமாக மிதந்த பெண் தென்னம்பிள்ளையூரைச் சேர்ந்த மீனாட்சி என்பது தெரியவந்தது.
இவரது கணவர் சேகர். மீனாட்சி உயிரிழந்ததற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. எனவே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
