கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அருகே ஒரு மலை கிராமத்தை சேர்ந்தவர் ஒரு மாணவி. இவர் குலசேகரம் அருகே உள்ள கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த மே 11ஆம் தேதி தனது உறவினர் ஒருவர் வீட்டில் இருந்த மாணவி மீண்டும் கல்லூரி விடுதிக்கு சென்றுள்ளார்.

மேலும் விடுதிக்காப்பாளரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஓய்வெடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின் மதியம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி கல்லூரிக்கு செல்லவில்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பதறி அடித்து கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். மேலும் அக்கம் பக்கங்களில் உள்ள பல இடங்களிலும் தேடி உள்ளனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரது செல்ஃபோனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

உடனே இது குறித்து குலசேகரம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த மாணவி கள்ளக்குறிச்சியை சேர்ந்த வாலிபருடன் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மாணவி கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது கள்ளக்குறிச்சி சேர்ந்த இளைஞர்கள் சிலர் கோதை ஆறு பகுதிக்கு சுற்றுலாக்கு வந்துள்ளனர்.

அப்போது பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் ஒரு இளைஞர் பேச்சு கொடுத்து சுற்றுலா தளங்களை பற்றி விசாரித்துள்ளார். அதன் பின் அந்த மாணவியிடம் தனது செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டு ஊருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த மாணவியும் இளைஞரும் தொடர்ந்து செல்போன் மூலம் தங்களது நட்பை வளர்த்துள்ளனர்.

நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் மாணவி கல்லூரியில் இருந்து அந்த இளைஞருடன் சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.