ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய உறுப்பினரும், 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தலில் மூளையாக செயல்பட்டவருமான அப்துல் ரவூப் அசார், இந்திய விமானப்படையின் தாக்குதலில் கடந்த வாரம் பாகிஸ்தானின் பாவல்பூரில் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன் மூலம் பாகிஸ்தான் தீவிரவாத ஆதரவாளராகவே செயல்படுகிறது என இந்தியா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

அப்துல் ரவூப் அசார், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் தம்பி ஆவார். இவரின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நேரில் பங்கேற்றதுடன், அவரது உடலுக்கு பாகிஸ்தான் தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்தது. இதனைப் பற்றி இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்திருந்தார்: “தீவிரவாதிக்கு அரசு மரியாதை அளித்திருப்பது பாகிஸ்தானின் உண்மை முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை தீவிரவாதி அப்துல் ரவூப்பின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ஐ.நா. சர்வதேச தீவிரவாதியாக அறிவித்த ஒருவரை பாகிஸ்தான் மரியாதை செய்வது, அந்த நாட்டின் இரட்டைச் செயல்களை உணர்த்துவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இதை லண்டனில் இந்திய தூதராக இருக்கும் விக்ரம் துரைசாமியும் உறுதிப்படுத்தியுள்ளார். “இந்த புகைப்படங்கள் பாகிஸ்தானின் வஞ்சகச் செயல்களை உலகிற்கு காட்டும் துருப்பாக இருக்கும்” என இந்திய அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.