ஹைதராபாத்தில் பவன் குமார் என்பவர் மர்மமான சூழலில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத் பகுதியில் உள்ள மதுரா நகரில் பவன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் ஹஸ்கி இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். சம்பவ நாளில் அவருடைய செல்லப்பிராணியான நாயின் வாயில் இரத்த கறைகள் இருந்ததால் அவருடைய மரணத்திற்கு நாய் தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த வழக்கில் பல கேள்விகள் எழுந்துள்ளன. பொதுவாகவே ஹஸ்கி இன நாய்கள் அமைதியான குணம் கொண்டவை என்பதால் அது உரிமையாளரை தாக்குவது சாத்தியமில்லை என்று விலங்கு நடத்தை நிபுணர்கள் மற்றும் செல்லப் பிராணி உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அவ்வாறு நாய் தாக்கி இருந்தால் பவன்குமார் ஏன் தப்பிக்க முயற்சிக்கவில்லை? எதற்காக கத்தவில்லை? என்று அருகில் உள்ள மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதோடு பவன்குமார் இறந்த பிறகு நாயை அவரது உடலின் அருகே வைத்து, அதன் வாயில் ரத்தம் பூசப்பட்டு விசாரணையை திசை திருப்ப சதி நடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து விலங்கு உரிமை வழக்கறிஞர்கள் மருத்துவ விசாரணை முடியும் வரை நாயை கருணை கொலை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.