அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் இன்று வரை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் பதவியேற்று நேற்றுடன் 100 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் 25 உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்திருந்தார். குறிப்பாக சீனாவிற்கு கூடுதல் வரியை அவர் அறிவித்த நிலையில் அதற்கு பதிலடியாக சீனாவும் கூடுதல் வரிவிதிப்பை அறிவித்தது. இதனால் உலக அளவில் வர்த்தகப் போர் மற்றும் பங்குச் சந்தைகளில் சரிவின் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 90 நாட்களுக்கு இதனை நிறுத்தி வைத்துள்ளார்.

ஆனால் சீனாவிற்கு மட்டும் வரியை அதிக படுத்தி உள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா பேச்சுவார்த்தைக்கு வந்தால் வரி விதிப்பு குறைக்கப்படும் என்று கூறியிருந்தார்.  இந்நிலையில் தற்போது சீனா அமெரிக்க அதிபரின் வரிவிதிப்பை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் சீனா ஒருபோதும் மண்டியிடாது. அவ்வாறு மண்டியிட்டால் அது கொடுமைப்படுத்துதலை மேலும் அதிகரிக்கும் என்றும், சீனா பின்வாங்காது… பலவீனமானவர்களின் குரல் எழுப்பப்படும் என்றும், உலகின் மற்ற நாடுகளுடன் ஒற்றுமையுடன் இருக்கும் போது அமெரிக்கா கடலில் சிக்கித் தவிக்கும் சிறிய படகு தான், முன்னோக்கிச் செல்லும் பாதையை ஒளிரச் செய்து மூடுபனியை அகற்றி கையில் தீபத்துடன் யாராவது முன்னோக்கி செல்ல வேண்டும் என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.