
உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹால் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது. இங்கு தினசரி ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். அந்த வகையில் செக் குடியரசை சேர்ந்த ஒரு பெண்ணும் சுற்றிப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் இந்த பெண் தற்போது காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளார். அதாவது கடந்த 3-ஆம் தேதி மதியம் அந்த பெண் தாஜ்மஹாலை பார்ப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அங்கு வந்த ஒரு மர்ம நபர் அந்த பெண்ணை தகாத முறையில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கரண் ரத்தோர் என்பவர் தான் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்தனர். மேலும் அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.