சண்டிகர் நகரில் ஒரு பெண் சாலை நடுவே ரீல் வீடியோ எடுத்து டான்ஸ் ஆடியதற்காக, அவரை காவல்துறையினர் கைது செய்ததுடன், தற்போது அந்த பெண்ணின் கணவரும் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண், சண்டிகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் அஜய் குண்டூவின் மனைவி ஜோதியாகும். இந்த சம்பவம், மார்ச் 20, 2025-இல், சண்டிகர் செக்டர் 20-ல் உள்ள சாலையில் நடனம் ஆடி வீடியோ எடுக்கும்போது நடந்தது. ஜோதி நடனம் ஆட, அவருடைய மாமியார் பூஜா அந்த வீடியோவை படம்பிடித்தார்.

இந்த வீடியோவில் ஜோதி சாலை நடுவே, டிராபிக் சிக்னலில் நின்ற வாகனங்களுக்கு முன்னால் நின்று, ஹரியான்வி பாடலுக்கு நடனம் ஆடி, அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். இதனால் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தடைபட்டு, சாலை போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது. இது விபத்துக்கும் வழிவகுக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியது. பின்னர், போலீசார் இருவரையும் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

 

பின்னர் நடந்த விசாரணையில், அந்த வீடியோவைக் கான்ஸ்டபிள் அஜய் குண்டூ தன் சொந்த சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டது தெரியவந்தது. இதனால், போலீசாரின் விதிமுறைகளை மீறியதற்காக அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து, உள்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது சண்டிகர் நகரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.