
பொதுவாக ஓய்வூதியம் என்பது முதுமை காலத்தில் தான் வழங்கப்படும். ஆனால் ரஷ்யாவை சேர்ந்த பாவேல் ஸ்டெப்சன்கோ என்பவர் மிகச் சிறிய வயதில் ஓய்வு ஊதியம் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதாவது அவருக்கு 23 வயது ஆகும் நிலையில் 2 ஆண்டுகள் மட்டும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். பின்னர் முழுமையான ஓய்வூதியத்துடன் தற்போது அந்த நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
இது தேசிய சாதனையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஸ்டெப்சன்கோ தனக்கு 16 வயது இருக்கும்போது ரஷ்ய உளவுத்துறை அமைச்சகத்தின் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக கடுமையாக பயிற்சி பெற்றார். பின்னர் உள்துறை அமைப்பின் பிராந்திய பிரிவில் ஒரு வேலையில் சேர்ந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவர் 2 வருடங்களில் ஓய்வு பெற்றுவிட்டார்.
ரஷ்ய சட்டத்தின் படி போர் சட்ட காலத்தில் பணியாற்றும் நபர்கள் ஒவ்வொரு மாதமும் பணிக்காக 3 மாத சேவைக் காலத்தை பெறுகிறார்கள். இதன் மூலம் குறைந்த நேரத்தில் தேவையான சேவை ஆண்டுகளை அவர் நிரப்ப முடிந்தது. இதன் அடிப்படையில் கடந்த 2023 நவம்பர் 28 அன்று அவர் ஓய்வு பெற விண்ணப்பித்ததோடு முழுமையான ஓய்வூதியத்தையும் பெற்றார்.
இவரின் இந்த அபூர்வ சாதனை சர்வதேச சாதனை பதிவு INTERRECORD நிறுவனத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டது. இது ரஷ்ய சாதனைப் பதிவில், புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆஃப் ரஷ்யா என அழைக்கப்படும் பதிவிலும் இணைக்கப்பட்டது. ரஷ்ய அரசு ஊடகங்கள் இதை நாட்டின் வலுவான சமூக பாதுகாப்பு அமைப்புக்கான சான்றாக வர்ணிக்கின்றன.
ஆனால், சிலர் இது நீண்ட காலத்தில் தொடர முடியாத ஒரு விதிமீறல் எனவும் விவாதிக்கின்றனர். எனினும், அவருக்கு இளம் வயதிலேயே பொருளாதார பாதுகாப்பு மற்றும் முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளது. மேலும் இந்த அறிய வாய்ப்பு இவரது வயதினருக்கு சாதாரணமாக கிடைக்காதது என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.