நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்பட உள்ள விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு தொகுதி குறைப்பு தான் தண்டனையா? பாஜகவின் சூழ்ச்சியை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது. மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையின் அடிப்படையில் தான் தமிழகத்தில் மக்கள் தொகை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாக வைத்து தொகுதிகளை குறைப்பதா? இதனை தமிழ்நாடு அரசு ஏற்காது. அதிமுகவும் இதனை ஏற்றுக் கொள்ளாது. முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்போமா என்பதை அதிமுக தலைமை தான் முடிவு செய்யும். தமிழக அரசு ஒருநாளும் சூழ்ச்சியை ஏற்காது. வடக்கில் அதிக தொகுதிகளும் தெற்கில் குறைந்த தொகுதிகளும் என்ற நிலைப்பாடு சரி இல்லை. தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் விதமாக மத்திய அரசு நடந்து கொண்டால் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஜெயக்குமார் பேசியுள்ளார்.