
தமிழகத்தை வஞ்சிப்பதே பாஜகவின் கொள்கை என்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழுக்கு துரோகம் செய்யும் இந்தி சமஸ்கிருத சேவகர்கள் எனவும் முதலமைச்சர் கூறி இருந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், யார் முதலில் தமிழுக்கு துரோகம் செய்தார்கள்? தன் பெயரில் மட்டுமல்ல உயிரிலும் தமிழ் உள்ளது. நான் தமிழ் வழியில் தான் படித்தேன். திமுகவில் எத்தனை பேர் தமிழ் வழியில் படித்தார்கள்? அமைச்சரவையில் இருக்கும் எத்தனை அமைச்சர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்?.
இருமொழிக் கொள்கையால் ஆங்கிலம் வளர்ந்ததாகவும் அதனால் உலக அரங்கில் தமிழர்கள் வளர்ந்திருப்பதாகவும் முதல்வர் கூறுவது முற்றிலும் பொய். அவர்கள் ஆங்கிலம் கற்றார்களா அல்லது தமிழ் கற்றார்களா என்று சொல்லுங்கள். 10 வருடங்களுக்கு முன்பு பாரத பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட மருந்தகத்தை தற்போது காப்பியடித்து தமிழக முதல்வர் திறந்து வைக்கின்றார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட மாடல் ஆட்சியிடம் தான் குழப்பமான கூட்டணி இருக்கும். ஜாக்டோ ஜியோ போராட்டம் தான் ஸ்டாலின் அரசு எப்படி நடந்து கொள்கிறது என்பதற்கு உதாரணம். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தோல்வியை தழுவுவார்கள் என்பதற்கு இதுவே சான்று என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.