திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்குவதாக மத்திய அரசு கூறுகின்றது. இந்த திட்டம் மூலம் தரமான கல்வியை வழங்கப் போவதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் தமிழகம் ஏற்கனவே மாணவர்களுக்கு தரமான கல்வியை தான் வழங்கிக் கொண்டிருக்கிறது. பி எம் ஸ்ரீ திட்டத்தின் மூலமாக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வருவதை நாங்கள் தெரிந்து கொண்டோம். இதனால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும்.

இந்தியாவிலேயே அதிக அளவில் இடைநிற்றல் இல்லாத ஒரு மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருவதாக நாங்கள் கூறினோம். ஆட்சி மாற்றத்தின் போது 16 சதவீதமாக இருந்த இடைநிற்றல் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மீண்டும் ஒரு மொழிப்போரை கொண்டு வரக் கூடாது என்ற வகையில் தமிழக அரசின் கண்டனத்தை தெரிவித்துள்ளோம். இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்ட தமிழகத்தில் கல்வி கற்றுள்ள மாணவர்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதித்து உயர்ந்து நிற்கின்றனர். இன்று மத்திய கல்வி அமைச்சர் தமிழகத்திற்கு புதிய கல்விக் கொள்கை குறித்து கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு இறங்கி வந்து கடிதம் எழுதுவது தூண்டில் போட்டுவிட்டு அதில் மீன் ஏதாவது சிக்காதா என்று பார்ப்பது போல தான் இருக்கிறது என அன்பில் மகேஷ் விமர்சித்துள்ளார்.