தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கும் வரை கல்விக்கான நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கையெழுத்து இயக்கத்தில் பாஜக 90 நாட்கள் போவது அவர்களுக்கான பயணமாக பார்க்கவில்லை. அதனை எங்களுக்கான பயணமாகவே நாங்கள் பார்க்கின்றோம். 90 நாட்கள் காலத்திற்கு செல்லும் போது பாஜகவினரே வருத்தப்படும் பயணமாக தான் அது இருக்கும்.

அதனைப் போலவே இந்த பள்ளியை மூட வேண்டும், அந்தப் பள்ளியை மூட வேண்டும் என்று யாரும் சொல்லாதீர்கள். ஏனென்றால் உத்திரபிரதேச மாநிலத்தில் சுமார் 25 ஆயிரம் பள்ளிகளை மூடிவிட்டு அங்குள்ள மாணவ மாணவிகளின் கல்வியில் மண்ணை அள்ளி போட்டு விட்டார்கள். அங்கு மட்டுமல்லாமல் பீகார் மற்றும் மத்திய பிரதேசம் என அனைத்து மாநிலங்களிலும் பள்ளியை மூட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு ஜனநாயக நாடு. அனைவரையும் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

ஆனால் அரசு பள்ளிகளில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றது, அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும். குழந்தைகள் பள்ளிக் கல்வியில் இருந்து வெளியில் சென்றுவிடாமல் படிக்கின்ற வயதில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். எது எப்படியாக இருந்தாலும் வருகின்ற மார்ச் 1 முதல் புதிய சேர்க்கை பணியை தொடங்க உள்ளோம். தமிழக பள்ளிக்கல்வித்துறையில் எங்களுடைய கடமையை நாங்கள் சிறப்பாக செய்து கொண்டே இருப்போம். எங்கள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்பது முதல்வருக்கும் எங்களுக்கும் நன்றாகவே தெரியும் என அன்பில்  மகேஷ் தெரிவித்துள்ளார்.