
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100க்கு 90 சதவீதத்திற்கும் மேல் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், வடசென்னை ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதை மாற்றி வடசென்னை வளர்ச்சி சென்னை ஆக மாற்றி வருகின்றோம். வடசென்னை யின் வளர்ச்சிக்காக சுமார் 6400 கோடியில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் 49 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் கட்டாயம் நிறைவேற்றுவோம்.
சொன்னதை செய்யக்கூடிய ஆட்சி தான் திமுக ஆட்சி. சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சி தான் இந்த திமுக ஆட்சி. வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்து நடைபெறக்கூடிய ஆட்சி தான் நம்முடைய திமுக ஆட்சி. வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும், வாக்களிக்க தவறியவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு வாக்களிக்காமல் விட்டு விட்டோமே என்று வருந்த வேண்டும் என்ற நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100க்கு 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றியுள்ளோம்.
எஞ்சியுள்ள அனைத்து திட்டங்களுமே விரைவில் நிறைவேற்றப்படும். தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றி வருகின்றது. பள்ளிகளில் காலை உணவு திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் அந்தத் திட்டங்களை இன்று தமிழகத்தில் செயல்படுத்தி காட்டியுள்ளோம். புதுமைப்பெண் திட்டத்தால் பலன் அடைந்த மாணவிகள் அனைவரும் என்னை அப்பா என்று அழைக்கும் போது பெருமையாக இருக்கின்றது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.