தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் வருகின்றது. ஆனால் நாங்கள் ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். அதனால் வலுவான கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி பெறுவோம். அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் தேமுதிக அதில் இருக்குமா என்பதை ஜோதிடமாக சொல்ல முடியாது. அவங்க இணைவார்களா அல்லது இவங்க இணைவார்களா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. இந்த ஒரு வருடம் கழித்து யார் யாருடன் கூட்டணி அமைக்கிறார்கள், கூட்டணி எப்படி அமையப் போகிறது என்பது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தெரிந்து விடும் என்று பிரேமலதா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் தயவு செய்து அதிமுகவுடன் கூட்டணி தேவையில்லை என்று முழக்கமிட்டனர்.

அப்போது லேசாக சிரித்த பிரேமலதா தனது பேச்சை தொடர்ந்தார். இன்று தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை மிகவும் மோசமாக போய்க்கொண்டிருக்கின்றது. தமிழகத்திற்கு இது பெரிய தலைகுனிவு. பள்ளி படிக்கும் மாணவி முதல் பாட்டி வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள். எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது. இவைதான் பாலியல் வன்கொடுமைக்கு முக்கிய காரணம். அரசாங்கத்தை எதை முன்னுதாரணமாக காட்டுகிறார்கள் என்பது தெரியவில்லை. மக்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும். திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு எதற்கு கொண்டாட்டம். போட்டியே இல்லாமல் வெற்றி பெற்றதெல்லாம் ஒரு வெற்றியா. இதனை நாங்கள் வெற்றியாகவே எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.