
தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் தன்னுடைய கட்சி கொள்கை தலைவர்களாக அம்பேத்கர், வேலு நாச்சியார், பெரியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை அறிவித்துள்ளார். நேற்று தன்னுடைய கட்சி அலுவலகத்தில் வைத்து பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தி போட்டோ வெளியிட்ட விஜய் தற்போது வேலுநாச்சியார் நினைவு தினத்தை முன்னிட்டு தன்னுடைய கட்சி அலுவலகத்தில் அவருடைய புகைப்படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், மண்ணைக் காக்க வாளேந்தி போர்க்களம் புகுந்த வீர புரட்சியாளர். இந்தியாவின் முதல் விடுதலை பெண் போராளி. அனைத்து சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடும் நாடாண்ட தமிழச்சி.
எம் கழகத்தின் கொள்கை தலைவர். வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு என்னுடைய கட்சி அலுவலகத்தில் அவருடைய திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் முன்னதாக நேற்று எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு விஜய் மரியாதை செலுத்தாதது ஏன் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி அமையும் என்று கூறிய விஜய் பெரியாருக்கு மரியாதை செலுத்திவிட்டு எம்.ஜி.ஆருக்கு மட்டும் மரியாதை செலுத்தாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பிய நிலையில் ஏற்கனவே பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து தான் விஜய் அனைத்தையும் செய்வதாகும் அரசியல் களத்திற்கு நேரடியாக வரவில்லை எனவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.