நாடாளுமன்றத்தில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் மாநிலத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும். இதைத்தொடர்ந்து அடுத்த 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும். இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில் இன்று மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகம் தொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மசோதா அறிமுகம் செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பியதால் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்காக முதன்முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில் மக்களவையில் 269 பேர் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளார். 198 பேர் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப் போவதாக சட்ட திருத்தம் கொண்டு வருகிறது. மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னணு வாக்கு இயந்திரம் வேலை செய்தது. மீதி பேர் வாக்கு சீட்டு முறையில் வாக்களித்தனர். ஒரே தேர்தல்- மக்களவையே முன்மாதிரி என கம்யூனிஸ்ட் எம்பி கே.வெங்கடேசன் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
