இந்தியாவில் ஒருங்கிணைந்த அடையாள அட்டையாக ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆதார் மையங்களில் விண்ணப்பித்து பொதுமக்கள் அட்டையை பெற்று கொள்ளலாம். மேலும் அங்கேயே பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே எந்தவித முறையான ஆவணங்களும் இன்றி தற்சமயம் தரகர்களின் உதவியுடன் ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் திருப்பூரில் வங்க தேசத்தை சேர்ந்தவர்களுக்கு மாரிமுத்து என்பவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ஆதார் அட்டை பெற்று தந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் கடந்த 4 ஆண்டுகளில் 100 பேருக்கு போலியாக ஆதார் அட்டை பெற்று தந்துள்ளார். ஆகவே இது போன்ற புகார்களை அடுத்து ஆதார் பெறுவதில் புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் கோரி விண்ணப்பித்தால் அவர்களது மனுக்கள் ஆன்லைன் மூலம் யூ.ஐ.டி.ஏ.ஐ மையத்திற்கு செல்லும் பின்பு ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவருக்கு ஆதார் அட்டை வழங்கப்படும்.

அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அது குறித்து விசாரணை நடத்த அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு தாசில்தார் தலைமையில் ஆர். ஐ மற்றும் வி.ஏ.ஓ-க்கள் உண்மை தன்மையை நேரடியாக கள ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து தாசில்தார் ஒப்புதல் அளித்த பின்னரே ஆதார் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிய அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு பிற மாநிலங்களில் ஆதார் அட்டை உள்ளதா? இலங்கை அகதியா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தாசில்தார்கள் விசாரணை நடத்திய பின்னரே ஒப்புதல் அளிப்பார்கள். இதற்காக முதற்கட்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. வருகின்ற 15-ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.