
22 ஆண்டுகளுக்கு முன் தந்தையை வாகனத்தில் மோதிக்கொன்ற நபரை பழிவாங்க 30 வயதான கோபால் சிங் ஒரே மாதிரியான முறையில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் ராஜஸ்தானின் தல்தேஜ் பகுதியில் நடந்துள்ளது. நக்கத் சிங் (50) என்ற நபரை, அவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கோபால் சிங் இயக்கிய டிரக் மோதியதில் பலியானார். இது முதலில் சாலை விபத்தாகக் கருதப்பட்டது, ஆனால் பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இது நன்கு திட்டமிட்ட கொலை என தெரிய வந்தது.
2002 ஆம் ஆண்டு, கோபாலின் தந்தை ஹரி சிங், ஜெய்சல்மரில் தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நக்கத் மற்றும் அவரது சகோதரர்கள் இயக்கிய டிரக் மோதி கொல்லப்பட்டார். அப்போது கோபால் சிங் 8 வயதாக இருந்தார். இந்த சம்பவத்துக்காக நக்கத் மற்றும் அவரது சகோதரர்கள் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தனர். தந்தையின் கொலையை மனதில் வைத்துக்கொண்ட கோபால், பழிவாங்குவதற்காக 22 ஆண்டுகள் காத்திருந்தார்.
தந்தையின் கொலை நடந்த அதே முறையில் நக்கத்தை கொலை செய்ய திட்டமிட்ட கோபால், இதற்காக வங்கியில் கடன் பெற்று கடந்த வாரம் ஒரு டிரக்கை வாங்கியுள்ளார். ஒரு வாரமாக நக்கத்தை பின்தொடர்ந்த அவர், சூழலை பரிசீலித்து சரியான தருணத்தில் அவரை தாக்கியுள்ளார். இந்த தகவலை கோபாலின் செல்போனில் உள்ள இடமறிதல் தகவல்கள் மூலம் காவல்துறையினர் உறுதிசெய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், கோபால் சிங் மீது முதலில் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில், இது பழிவாங்கும் கொலை என தெரிய வந்தது. இதனால், காவல்துறையினர் கோபாலை கைது செய்து, தற்போது அவர்மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.